Wednesday, August 15, 2007

அலப்புழா பயணம்

இந்தப் பயணத்தைப் பற்றி தெளிவான திட்டம் தயாரானது முதலில். மிகச்சிறு குழு அளவில் தோன்றிய திட்டத்தில் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக திட்டமும் அதனுடைய பலன்களையும் பலவீனங்களையும் கூட்டிக்குறைத்துக் கொண்டது; ஆனால் பலன்கள் அதிகமாயிருந்தது திட்டத்தின் வெற்றி.

எங்கள் அலுவலகத்தில் இருந்து நாங்கள் சிறு சிறு பெங்களூருக்குள்ளான பயணங்களை மேற்கொண்டிருந்தோம்; ஆனால் இந்தத் திட்டம் முதலில் இந்தக்குழுவால் தீர்மானிக்கப்பட்டதில்லை. கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட சிலரால் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டாலும் எங்கள் குழுவின் முழு ஆதரவும் இந்தப் பயணத்திற்கு இருந்ததூ. ஏறக்குறைய கலவரஹல்லி பெட்டாவிற்கு வந்திருந்த அனைவரும் இந்தப் பயணத்திற்கும் வந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை நிறைய குடும்பங்கள் பங்கேற்றன என்பது தான் முக்கியமான ஒன்று, இப்பொழுதெல்லாம் குடும்பம் என்ற சொற்ச்சேர்க்ககையில் அடுங்குவது பெரும்பாலும் கணவன் மனைவிதான்; அப்படியில்லாவிட்டால் அவர்களுடன் கூடுதலாக ஒரு குழந்தை. அப்படி இந்தமுறை குழந்தையுடனான இரண்டு குடும்பங்களும் குழந்தை இல்லாத(இதுவரை) இரண்டு குடும்பங்களும் வந்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் சில திருமணம் ஆகாத பெண்களும், இதைக் குறிப்பிடுவதற்கு காரணம் பயணங்களில் பெண்களை சேர்த்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சனை தெரிந்து பெரும்பாலும் பெண்கள் அவர்களாய் வருவதில்லை. அப்படியில்லாமல் இந்தப் பயணத்தில் எண்ணிக்கை அதிகமானதால் பெண்களும் வருவதாய் ஒப்புக் கொண்டார்கள்.

கேரளாவிற்கு சென்று வருவதற்கான பேருந்தும், படகுப்போட்டியை காண்பதற்கான படகும், அதாவது படகுப்போட்டி நடைபெறும் இடம் ஆறாகயிருப்பதால் அந்த இடத்திற்குப் போய்ச் சேர்வதற்கே நமக்கு ஒரு படகு வேண்டும். அந்தப் படகும்; அலப்புழாவில் தங்கியிருப்பதற்கு backwaterன் மேல் அமைந்த ஒரு ஹோட்டலும் அடுத்த நாளுக்கான சுற்றுதலுக்கான படகு வீடும் முன்பே பெங்களூருவில் இருந்தே பதிவு செய்யப்பட்டிருந்தன.(இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமானால் படகுப்போட்டியைக் காண்பதற்கான படகு மட்டும் கேரளாவிற்குச் சென்றிருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களால் முன்பே செய்யப்பட்டிருந்தது.) மொத்தச் செலவாக தனிநபருக்கு 4000 ரூபாய்கள் என்று முடிவானது. இந்த அறிவிப்பிற்குப் பின் எப்பொழுதும் ICICI Directன் முன்னால் உட்கார்ந்திருக்கும் இரண்டு நபர்களின் விலகலுக்குப் பின்னால் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது 4000 ரூபாய்கள் அவர்களுக்கு அதிகமாகப் பட்டதை. என்ன செய்வது வருடம் முழுவது அந்த ஸ்கீரின் முன்னால் தவமாய் தவமிருந்தும் அவர்களுக்கு கிடைக்கும் லாபமே 5000 தான் எனும்பொழுது அவர்கள் யோசிப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன் ;-)

மதியம் மூன்றரை மணியளவில் கிளம்புவதாக திட்டம் கொஞ்சம் போல் தாமதித்து மூன்றே முக்கால் நாலு மணிக்கு பெங்களூருவில் இருந்து கிளம்பினோம். சென்ற முறை வயநாட் சென்ற பொழுது பயன்படுத்திய அதே வழிதான். பெங்களூர் - மைசூர் - குண்டல்பேட் - வயநாட் - கோழிக்கோட் - திருச்சூர் - அலப்புழா. ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் மூன்று நான்கு மணிநேரம் தாமதமாகத்தான் அலப்புழாவிற்கு வந்திருந்தோம். வந்து சேர்ந்ததும் ஹோட்டலில் செக்கின் செய்துவிட்டு படகில் அமர்ந்து படகுப்போட்டி நடக்கும் இடத்திற்குச் சென்ற பொழுது முதல் வரிசையில் எங்கள் படகிற்கு இடம் கிடைக்கவில்லை. அதனால் ஒரு படகின் பின்னால் நின்று கொண்டோம்.

இன்னும் விரிவாக; அதாவது படகுப்போட்டி நடக்கும் இடம் ஒரு 100 மீட்டர் தடகள் அரங்கமாகக் கொண்டீர்களானால், அதன் ஒருபக்கம் நிலத்தாலும் மறுபக்கம் நீராலும் ஆனது படகுப்போட்டி நடக்கும் பகுதி. நீரால் ஆன பகுதியில் வரிசையாக போட்டி நடைபெறும் இடத்திலிருந்து சற்று இடம் விட்டு படகுகளின் அணிவகுப்பு. போட்டியைப் பார்ப்பதற்காக நாங்கள் திட்டமிட்ட சமயத்திற்கு வரமுடியாததால் எங்கள் படகிற்கு முதல் வரிசையில் இடம் கிடைக்கவில்லை. இன்னொரு படகின் பின்னால் நின்று கொண்டிருந்தோம்; ஆனால் போட்டி ஆரம்பிக்கும் பொழுது முன்னால் நின்ற படகில் நாங்களும் சென்று நின்று கொண்டோம். படகு என்று சொல்கிறேனே தவிர ஒவ்வொரு படகும் குறைந்தபட்சம் இருபத்தைந்து முப்பது நபர்கள் உட்கார நிற்கக்கூடிய வசதியுடையது.

மூன்றரை மணியளவில் தொடங்கிய போட்டிகளில் பெரும்பாலும் வெற்றிபெற்றவர்களுக்கும் இரண்டாவது இருந்தவர்களுக்குமான இடைவெளி மிக அதிகமாக இருந்ததால் என்னுடன் பயணம் செய்த மக்களின் ஈடுபாடு போட்டியை ரசிப்பட்தில் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. மொத்தமாகவே 4 - 5 போட்டிகள் தான் விறுவிறுப்பைத் தந்தன; இதில் கடைசி ஃபைனலில் போட்டியிட்ட பட்டாரா(pattara)விற்கும் வாய்ப்பாட்டிற்கும் நல்ல மோதல் இருந்தது. பட்டாராவின் சப்போர்ட்டர்கள் நாங்கள் இருந்த படகின் அருகில் இருந்தார்கள் அவர்களுக்கு அருகில் வாய்ப்பாடு படகின் சப்போர்ட்டர்கள். இந்த சப்போர்ட்டர்களின் சண்டை படகுப்போட்டியை விடவும் விருவிருப்பாகயிருந்தது. கடைசியில் போட்டியில் வென்றது வாய்ப்பாடு படகுதான்.

ஆனால் எங்கள் படகை கடைசி ஃபைனல்ஸின் பொழுது வெளியில் எடுக்க வேண்டிய சிக்கல் வந்ததால் மற்ற போட்டிகளைக் கவனித்ததைப் போல் கடைசிப் போட்டியை தீவிரமாய்க் கவனிக்க முடியவில்லை, படகுப்போட்டி பிரம்மாண்டமாய் இருக்கிறது. ஆனால் நாங்கள் அவதியில் வந்து அவதியில் போட்டியைப் பார்த்து அவதியில் சென்றதால் இன்னுமொறுமுறை போட்டிக்குச் சென்று வரவேண்டும் என்று தோன்றுகிறது.

அடுத்த நாள் அலப்புழாவின் backwaterஸில் படகுப்பயணம். இரண்டு பக்கங்களும் தென்னைமரங்களால் ஆன ஆற்றுப்பகுதில்(சொல்லலாமா?) எல்லா வசதிகளுடன் கூடிய படகுவீட்டில் பயணித்தோம்(உள்ளே ஏசி ரூம்கள் எல்லாம் உண்டு!). முன்நாளைப் போலில்லாமல் அமைதியான பயணத்தில் ரசிக்கக்கூடியக் காட்சிகள் அதிகம் இருந்தன. அமைதியாக எந்தச் சிந்தனையும் இல்லாமல் வெறுமனே உட்கார்ந்திருக்க முடிந்தது இருபக்க கரைகளையும் பார்த்தவாறே.

உணவு இந்தப் பயணத்தில் மிகவும் அருமையாக அமைந்ததைச் சொல்லித்தான் ஆகவேண்டும். போட்டியைக் காணச் சென்ற பொழுது ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டிருந்த சாப்பாடாகட்டும் இரவு ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டாதகட்டும் பிரம்மாதமாகயிருந்தது. முன்னமே இத்தனை பேர் நான் வெஜ், வெஜ் என்று சொல்லப்பட்டு விட்டதால் மிக அருமையாக ஏற்பாடு செய்யப்பட்டு காத்திருந்தது உணவு. ஞாயிற்றுக்கிழமை காலை படகுப்பயணத்திற்கு முன் சிறிது தூரம் கரைப்பகுதியில் நடந்து திரும்பியது திருப்தியான அனுபவம்.

இந்தப் பயணநேரம் முழுவதும்(மொத்தமான பேருந்து பயணத்தில்) என்னுடன் இருந்த புத்தகம் பாவை விளக்கு - அகிலன் உடையது. முகம் மறைத்துக் கொள்வதற்கும், என் வாயால் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவும், என் கோபங்களை அடக்கியாளவும் பெரிதும் உபயோகமாகியிருந்தது. வேறென்ன மக்கள் அந்தாக்ஷரி விளையாடத் தொடங்க நான் தமிழ்ப் பாடல்கள் என்று கேட்டேன்; நாட் அலவ்ட் என்று சொன்னவுடன் அழகாய் பாவை விளக்கை புரட்டத் தொடங்கின கைகள். பேருந்து முழுவதையும் ஆக்கிரமித்திருந்த அவர்களின் உற்சாகம் என்னைத் தொடவில்லை நான் அகிலனின் தணிகாசலத்திலும் உமாவிலும் செங்கமலத்திடமும் மூழ்கியிருந்தேன்.

பெங்களூரில் மிகச்சுலபமாக LTTE என்ற பட்டம், நீங்கள் தீவிர தமிழராகயிருந்தால் கிடைக்கும்; முன்பே எனக்கு அந்தப் பட்டம் உண்டென்றாலும் ஒட்டுமொத்த பயணத்திலும் மொத்தமாக இந்தி ஆக்கிரமிப்பு செய்த நேரத்தில் பாவை விளக்கின் துணைகொண்டு நான் பயணத்தை எளிதாக்க நேரில் சொல்ல முடியாதவர்கள் மறைமுகமாகவும் நேரில் சொல்லக்கூடிய உரிமையுடையவர்கள், எல்லாம் மென்டாலிட்டி பிரச்சனை என்றும் சொல்லி LTTE என்று ஓட்டிக்கொண்டிருந்தார்கள். இதற்கெல்லாம் கவலைப்படுவதை விட்டு வருடங்களாகிவிட்டது என்பதால் என்னால் இந்தப் பயணத்தை நெருடல் இல்லாமல் ரசிக்க முடிந்தது.

வயது குறைவாகயிருந்தாலும் நான் என்னை சிறுபிள்ளையாக இன்னும் நினைத்துக் கொண்டிருக்கவில்லையாதலால் என்னால் அவர்களை கேள்வி கேட்காமல், இதன் காரணமாகவெல்லாம் சங்கடப்படாமல் இந்த விஷயங்களைப் புறக்கணிக்க முடிந்தது.

அடுத்த விஷயம் தண்ணியடிப்பது எல்லா சமயங்களிலும் எனக்கென்று பிரச்சனையை இழுத்துவருவது; இந்தப் பயணத்திலும் இவர்கள் புல் லோடடாகத்தான் பயணத்தைத் தொடங்கினார்கள். முன்பக்க சீட்கள் குடும்பத்திற்கானது என்பதால் மட்டுமல்ல எனக்கு பின் சீட்கள் மிகவும் பிடிக்குமென்பதால் தண்ணியடிப்பவர்களுடன் உட்காரமுடிந்திருந்தது. எனக்குத்தெரிந்து அந்தப் பேருந்தில் என்னைத் தவிர்த்து இரண்டு பேர் தான் தண்ணியடிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். பொங்கி வழிந்த செயற்கை உற்சாகத்தில் கலந்துகொள்ளாமல் இருக்க முடியாதென்பதால் கொஞ்சம் போல் வழிந்து கொண்டு உற்சாகப் பெருவெள்ளத்தில் நானும் மூழ்கினேன்.

எல்லாவற்றையும் கடந்து மிக அருமையான பயணமாக அமைந்தது இந்த கேரளப் பயணம்.

புகைப்படங்கள் போட்ட பதிவு

PS: இது நிறைய அலுவல நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்பம் கலந்துகொண்ட பயணம் ஆதலால்; நண்பருடைய காமெராவைக் கையில் எடுத்தால், அபிஷியல் போட்டோகிராபர் ஆகிவிடும் வாய்ப்பிருந்ததால். நான் எஸ்கேப் ஆகியிருந்தேன் படகுப்போட்டியின் பொழுது காமெராக்கண்களை உதறிவிட்டிருந்ததால். அந்தப் படங்களை நான் எடுக்கவில்லை; நான் இந்தப் பயணத்தில் எடுத்தவைகள் பெரும்பாலும் ஃபோர்ட்ராய்டுகள் என்பதாலும் அவைகளை இணையத்தில் உலவவிடுவதை நான் விரும்பாததாலும் புகைப்படங்கள் இந்தப் பயணத்தில் கொஞ்சம் போல் குறைவே.

Tuesday, August 14, 2007

படகுகளின் தேசம் - அலப்புழா படங்கள்























கேரள தேசத்தின் அழகை மிகச்சிறு இடைவெளியில் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் அருமையாக அமைந்த பயணம் விரைவில் இதைப் பற்றி எழுதுகிறேன்.

Monday, August 13, 2007

மாமல்லபுரம் - நீண்ட நாள் ஆசையில் ஒர் பயணம் - படங்கள்