Thursday, February 7, 2008

காஷ்மீர் பயணம் - டெல்லியிலிருந்து காஷ்மீர்

தாஜ்மஹாலிலும் ஆக்ரா கோட்டையிலும் சேர்த்து நிறைய படங்கள் எடுத்தாகியிருந்ததால் எனக்கு அவற்றை ஒரு சிடியில் ஏற்றிக்கொள்வது பெட்டர் என்று பட்டது. டெல்லியில் எனக்குத் தெரிந்த கோல் மார்கெட் பகுதிக்குச் சென்று அதைச் செய்துவிட்டு, நேராய் இந்தியா கேட்டிற்கு வந்தேன். கொஞ்சம் படங்கள் எடுக்கலாமேயென்று நினைத்தவனாய். படமெடுத்து முடித்ததும் ஜம்மு செல்லும் ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் பிடிப்பதற்காக புதுதில்லி ரயில்வே ஸ்டேஷன் செல்ல வழி கேட்ட பொழுது தான், தில்லி மெட்ரோ பற்றிய அறிமுகம் கிடைத்தது.

தில்லி செக்கட்டரியேட்டில் இருந்து புதுதில்லி ரயில்வே ஸ்டேஷன் வரை செல்லும் மெட்ரோ கிடைக்குமென்று சொல்லி அனுப்பியதால் வந்து பார்த்தால், தில்லி மெட்ரோவின் தரிசனம் கிடைத்தது. ம்ம்ம் நன்றாக செய்திருக்கிறார்கள், மக்கள் அதிகமாக உபயோகிக்கிறார்கள் என்று தெரிந்தது. நான் தில்லியில் வேலை பார்த்த பொழுது அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தது தெரியும். இன்னும் இந்தியா முழுவதும் இந்த முன்னேற்ற பரவவேண்டும் என்று நினைத்துக் கொண்டு க்ளாக் ரூமில் இருந்த லக்கேஜ்களைக் கட்டிக்கொண்டு பழையதில்லி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துசேர்ந்தேன். ஜம்முதாவி எக்ஸ்பிரஸில் நான் மட்டும் தான் போகப்போவதாய் கற்பனை செய்து கொண்டு.

கடைசியில் பார்த்தால் ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் ஃபுல்லாகி என்னை ஆச்சர்யப்படுத்தியது. எல்லாம் வைஷ்ணவா தேவி செல்லும் மக்கள் என்று சீக்கிரமே புரிந்தது. என்னுடன் கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள் பயணித்தார்கள், கூடவே ஒரு கல்கத்தா குடும்பமும். அந்தக் குடும்பத் தலைவியைப் பார்த்ததும் அப்படியே கல்கத்தா காளியைப் பார்த்த நினைவு வந்தது. தீர்க்கமான புருவங்கள் அகலமான கண்கள் நெற்றியில் பயணத்தின் பொருட்டு வைக்கப்பட்ட திலகம் மற்றும் உடற்கட்டு என நான் அதிசயித்துப் போனேன் என்று தான் சொல்லணும். நான் சைட் அடிக்கவில்லை அந்தம்மாவை அவர்கள் வயதில் பெரியவர்கள், ஆனால் அந்த முகம் அப்படியே மனதில் பதிந்துவிட்டது. இன்னமும் நினைத்ததும் நினைவில் வருகிறது என்கிற அளவில்.

ஆளுக்கு ஒரு ஜூன்ஸ் பேண்ட் சர்ட் போட்டுக்கொண்டு ஒரு ஸ்வெட்டரை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு வந்திருந்தார்கள், அவர்களுக்கு ஏற்றது போலவே டெல்லியிலும் அவ்வளவு குளிரவில்லை ஆனால் தில்லியில் இருந்து கிளம்பியதும் தான் தாமதம் குளிரடிக்க ஆரம்பித்தது. அவர்கள் முதலில் ஷூவை அணிந்து கொண்டார்கள் பின்னர் ஸ்வெட்டரை ஆனாலும் குளிர் அதிகமாகி ஒவ்வொருவரும் குறிக்கிக் கொண்டு படுத்திருந்தார்கள். என்னிடம் கம்பளி இருந்தாலும் கொடுத்திருக்கலாம் ஆனால் நான் கொண்டு போனதும் ஒரு கம்பளி தான். காலங்கார்த்தாலை க்ளௌஸ் விற்றுக் கொண்டு வந்த பெண்ணை நிறுத்தி க்ளவ்ஸும் மற்றவையும் வாங்கி முதலில் அணிந்து கொண்டது இவர்கள் தான். காலையில் ஒரே பாட்டமாய் புலம்பல் குளிரில் தூங்கவே முடியலை என்று. எல்லா வேடிக்கைகளையும் நான் பின் தொடரும் நிழலின் குரலில் முகத்தை புதைத்துக் கொண்டே கவனித்துக் கொண்டிருந்தேன்.

ஜம்மு நாங்கள் இறங்கிய பொழுது குளிராகத்தான் இருந்தது ஆனால் 8, 9 மணிக்கெல்லாம் சாதாரண பெங்களூர் போல் ஆகியிருந்தது சொல்லப்போனால் என்னால் ஸ்வெட்டரை கூட போட்டுக்கொண்டு இருக்கமுடியலை என்பது தான் உண்மை. ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் வழி எப்பொழுதும் திறந்திருக்காதென்றும் ஜம்மு போய் தான் தெரிந்து கொள்ள முடியும் என்று சொல்லியிருந்ததால் ஸ்ரீநகர் செல்வதற்கு புக் செய்திருக்கவில்லை. நானும் அறிவாளியாக ப்ளைட் புக் செய்யும் வெப்சைட்டில் எல்லாம் காஷ்மீர் என்று தேடிக்களைத்து சரி காஷ்மீருக்கு ஏர்போர்ட் கிடையாது என்ற முடிவிற்கே வந்திருந்தேன். ஆனால் கடைசியில் தான் தெரியவந்தது ஸ்ரீநகர் என்பது தான் காஷ்மீர் என்பது. என்ன கொடுமைங்க இது சரவணன். இல்லாவிட்டால் தில்லியில் இருந்து நேராய் ஸ்ரீநகர் பறந்திருப்பேன். ஆனால் என் காஷ்மீர் பயணத்திலேயே மிகவும் ரசித்த/பயந்த/அதிர்ந்த ஒரு பகுதியை விட்டிருப்பேன் :).

அதுதான் ஜம்முவில் இருந்து காஷ்மீருக்கான என் பயணம். ஜம்மு ரயில்வே ஸ்டேஷனில் இருந்த ஜம்மு காஷ்மீர் ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனில் காஷ்மீர் போவதற்கு எவ்வளவு டிக்கெட் என்று கேட்டுவிட்டு சாப்பிடுவதற்காக சென்று வந்தேன். சாப்பிட்டு வந்து பார்த்தால் காஷ்மீருக்கு போக இருந்த பேருந்து போய்விட்டதாகவும் இனிமேல் குறிப்பிட்ட நம்பர் ஆட்கள் வந்தால் மட்டுமே வண்டி அனுப்பப்படும் என்றும் தெரியவந்தது. பின்னர் அதற்கு அருகில் இருந்த டூரிஸத்தின் அலுவலகத்தில் சென்று கேட்ட பொழுது அவர்கள் புக் செய்து தருவதாகவும் ஆனால் ஹவுஸ் போட் இங்கேயே புக் செய்ய வேண்டும் என்றும் சொன்னார்கள்.

லோன்லி ப்ளானட் புத்தகம் தலையாய் அடித்துக் கொண்டு தில்லியில் இருந்து ஹவுஸ் போட் புக் செய்யாதீர்கள் என்று கேட்டுக் கொண்டிருந்ததால் அந்தத் தவறைச் செய்யவில்லை, அதுமட்டுமில்லாமல் இந்த நபர்கள் உட்கார்ந்திருந்தது J&K Tourism என்ற அரசாங்கத்தின் போர்ட் போட்டிருந்த கட்டிடத்தில் என்பதால் முதலில் யோசித்து பின்னர் அங்கே ஏற்கனவே உட்கார்ந்திருந்த கப்புள் 1500 ரூபாய்க்கு ஹவுஸ்போட் எடுத்துக் கொள்ள(டீலக்ஸ்) தனியாக எனக்கு டீலக்ஸ்(900 ரூபாய்) எடுத்துக் கொண்டதும். எங்கள் மூவரையும் ஸ்ரீநகர் அனுப்பவதற்கான ஏற்பாடு செய்தார்கள். முதலில் ஒரு சுமோவில் உட்கார வைக்கப்பட்டு பின்னர் ஆறு பேர் சேர்வதற்காக காத்திராமல் அம்பாஸிட்டரில் உட்கார வைக்கப்பட்டோம். அந்தப் பயணத்திற்கான செலவு ஆளுக்கு 400 ரூபாய்கள், அம்பாஸிட்டர் ஓட்டுவதற்காக வந்து உட்கார்ந்ததா ஆளைப் பார்த்தால் குறைந்தது 60 வயது இருக்கும் என்று தெரிந்தது.(கடைசியில் சாச்சா சொல்லப்போய் அவருக்கு வயது 70 என்று தெரிய வந்தது.)

எனக்கு அத்தனை பயம் இல்லை, அவர் கொண்டு வந்த வண்டி T Board என்பதால் மட்டுமல்ல தன் உயிரைப் பயணம் வைத்து அத்தனை பெரியவர் ரிஸ்க் எல்லாம் எடுக்க மாட்டார் என்றுதான். நாங்கள் கிளம்பும் பொழுது எங்களுடன் அந்த தாத்தாவின் நண்பரும் சேர்ந்து கொண்டார். (அவரும் டிரைவராம் பயணத்தின் பொழுது தெரியவந்தது) எனக்கு சரியான கடுப்பு அந்த கப்புள் பின்னால் உட்கார்ந்து கொள்ள நான் டிரைவர் அவருடைய நண்பர் எல்லாரும் முன் பக்கம் என எனக்கு கடுப்பாய் இருந்தது.

மெதுவாய் நாங்கள் பேச்சுக் கொடுக்க சாச்சாவும் சரி, உடன் வந்தவரும் சரி நன்றாக பேசினார்கள். எனக்குத் தெரிந்து இது போல் போகும் டிரைவர்கள் எல்லாம் இன்பர்மேஷன் மூட்டைகளாக இருப்பார்கள், ரொம்பக் காலமாக எங்கள் வீட்டிற்கு என்று ஒரு அண்ணாவை அழைத்துக் கொண்டு நாங்கள் டூர் போவதுண்டு அவரும் அப்படித்தான். இன்ஃபர்மேஷன் கொடௌன். சாச்சா, காஷ்மீரைப் பற்றி பேச ஆரம்பித்தால் நிறுத்தாமல் பேசுவார், கொஞ்சம் வேகமாக பேசமுடியாது அவருக்கு லேசாய் மூச்சுத் திணறும். தேவதாரு மரத்திலிருந்து, உமர் அப்துல்லா, முஃப்தி முஹம்து சயீத், அவரது மகள், பாகிஸ்தான், அமேரிக்கா என்று நிறைய பேசுவார். ஆனால் அவற்றில் பெரும்பாலானவற்றை என் கதைகளுக்கு பயன்படுத்த உத்தேசித்திருப்பதால் இங்கே கிடையாது :).

நாங்கள் ஜம்முவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் காஷ்மீரை நோக்கி நகரத் தொடங்கினோம். மலைப் பாதை அங்கே ஆரம்பித்தது ஒரு புதுப் பிரச்சனை. நான் அறிந்தவரை டிரைவர்கள் சகுனத்தடையாக நினைப்பார்கள் என்பதால் பெரும்பாலும் மரணத்தைப் பற்றி பேசமாட்டார்கள். ஆனால் அந்தப் பாரம்பரியம் காஷ்மீரியர்களுக்குக் கிடையாது போலும், எங்கள் பயணத்தினூடாகவே சாச்சா அந்த இடங்களுக்கான அறிமுகங்களைத் தந்து கொண்டிருந்தார் எப்படியென்றால் இந்தப் பள்ளத்தில் தான் நாலு கார்கள் கீழே விழுந்தன, இரண்டு ஆமி ஜீப்கள் விழுந்தன என்றெல்லாம். அவர்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு தாங்கள் அறிந்த மரணங்களை விபத்துக்களைப் பற்றியெல்லாம் பேசத்தொடங்க, சாதாரணமாக மலைசரிவுப் பயணத்தை ரசிக்கும் என்னை பயமுறுத்தத் தொடங்கினர்.

அதே போல் டிரைவர்களே பயப்படும் இடங்களாக இரண்டு மூன்று இடங்களைச் சொன்னார்கள், ஒன்று மண்சரிவு ஏற்படும் இடம் எந்நேரத்தில் வேண்டுமானாலும் மேலிருந்து பாறாங்கல் தலையில் விழலாம் என்றும் அந்த இடத்தை கடப்பது என்பது உயிரைப் பணயம் வைத்துத்தான் என்று சொன்னார். இரண்டாவது இடம் ஒரு பாலம் மாதிரியானது அங்கே அடிக்கும் அசுரக் காற்றுக்கு மிலிட்டரி ட்ரக்குகள் கூட கீழே போய்விடுமாம், மூன்றாவது கொஞ்சம் வழுக்கும் தரை கொண்ட ஒரு பள்ளத்தாக்கை தாண்டும் பகுதி. ஆனால் அன்று பனிப்பொழிவு இல்லாததால் கார் வழுக்கவில்லை. அவர் சொல்லிக் கொண்டேயிருக்க எனக்கென்னமோ இன்றைக்கு ரத்தம் பார்க்காமல் காஷ்மீர் போய்ச் சேரமாட்டோம் என்ற உணர்வு வந்திருந்தது.

என்னுடன் வந்த தம்பதியில் அந்தப் பெண் 'சாச்சா எப்ப காஷ்மீர் போவேம்' என்ற கேள்விக்கு 'பேஹ்ட்டி அது அல்லாவுக்குத்தான் தெரியும்' என்று சொன்னாரே பார்க்கணும். சாச்சா எக்காரணம் கொண்டும் இத்தனை மணிக்குள் காஷ்மீர் போய்விடமுடியும் என்று சொல்லவேயில்லை. மலைச் சரிவும், சாவைப் பற்றிய பயமும், விபத்தாகிவிடக்கூடாது என்ற ஏக்கமும் கூடவே பனிபொழியக் கூடாது என்ற எண்ணமும் ஏற்பட்டது. அதைப் பற்றியும் பெரிய கதைகளை இருவருமே சொன்னார்கள். இந்தப் பாதையில் பனி பொழிந்து ஒரே இடத்தில் 7, 8 நாட்கள் இருக்க நேர்ந்ததைப் பற்றியும், மூடப்பட்ட பாதையைத் திறக்க ஆள்வரும் வரை அங்கேயே தான் இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும். நமக்கு நடுங்கத் தொடங்கியது.

என்னமோ மழை போல் பனிமழையும் இருக்கும் காஷ்மீர் போனால் அனுபவிக்கலாம் என்று நினைத்துச் சென்றேன். ஆனால் நான் காஷ்மீர் பயணத்தை எல்லாம் முடித்துக் கொண்டு ஸ்ரீநகரில் இருந்து விமானம் ஏறும் பொழுது சாச்சா சொன்ன 'நல்லவேளை பனிப்பொழிவு இல்லை நீங்க தப்பிச்சீங்க' என்பது எவ்வளவு வாஸ்தவமானது என்று புரிந்தது.

காஷ்மீருக்குள் நுழையும் ஜவஹர் டனலை நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது இரண்டு ஆப்பிள் ஏற்றி வந்த ட்ரக்குகள் விபத்திற்குள்ளானதால் ரோட் ப்ளாக். சாச்சா முகம் அப்படியே சோகமாகிவிட்டது அந்தச் சமயம் அவர் ஒன்றும் சொல்லவில்லை ஆனால் பின்னர் 'நல்லவேளை ஆமி ட்ரக்குகள் அருகில் இருக்கும் காரணத்தால் சீக்கிரம் க்ளியர் ஆகிவிட்டது இல்லாவிட்டால் இன்றைக்கு முழுவதும் அங்கேயே இருந்திருக்க வேண்டியிருக்கும்' என்று சொன்னாரே பார்க்கணும். பின்னர் ஜவஹர் டனலிலும் இரண்டு பக்கங்களில் ஒரு பக்கத்தை அடைத்துவிட்டு மற்றொரு பக்கத்தை மட்டும் காஷ்மீரில் இருந்து வருபவர்களையும் காஷ்மீருக்கு போகிறவர்களையும் உபயோகப்படுத்தும் படியான நிலை.

சாச்சா டனலில் செல்லும் பொழுது சொல்லிக் கொண்டிருந்தார், டனல் 3 கிமீ நீளமானது பாதியில் ஏதாவது பிரச்சனை என்றால் வண்டியை திருப்பவோ பின்னால் கொண்டு வரவோ முடியாது மறுபக்கத்தில் இருந்து ட்ரக் கொண்டு வந்துதான் டௌவ் செய்து கொண்டு போக வேண்டுமென்று. ஆமாம் ஒரு ட்ரக் செல்லும் அளவுக்குத்தான் அந்த டனல் இருக்கும். ஆனால் அப்படி எந்த பிரச்சனையும் வராமல் நாங்கள் டனலை க்ராஸ் செய்துவிட்டோம். அதற்குப் பிறகு காஷ்மீர் ப்ளைன் தான், மலைச் சரிவு கிடையாது.

சாச்சாவின் ட்ரைவிங் பற்றிச் சொல்ல வேண்டும் அவருடைய அனுபவம் முழுவதையும் வைத்து அவர் ஓட்டிக் கொண்டு வந்தார் என்று தான் சொல்லவேண்டும். ஏறக்குறைய மூன்று நான்கு முறை இமாச்சல் பிரதேஷை காரில் சுற்றியவன் என்ற முறையில் சாச்சா பொறுமையாகவும் நிதானமாகவும் அதே சமயம் வேகமாகவும் காரைச் செலுத்தினார். சொல்லப்போனால் அவருக்கு காஷ்மீரின் எல்லா மூலை முடுக்குகளும் தெரியுமாயிருக்கும். அற்புதமாய் ஓட்டிக் கொண்டு வந்தார்.

காஷ்மீரை நெருங்கிக் கொண்டிருந்தோம் 24 கிலோமீட்டர் இருக்கும், ஆளரவமில்லாத ரோடு, நிலா வெளிச்சமும் சுத்தமாக இல்லை, காரை ப்ளைன் ரோடு என்பதால் கொஞ்சம் வேகமாகவே ஓட்டி வந்தார் அவர். சட்டென்று ஒரு இறக்கத்தில் இறங்கி மேலேயேறும் பொழுது சட்டென்று இடைபுகுந்த கருப்பு நிறக் கழுதை ஒன்றை இடித்து தூக்கியெறிந்தது என்னவோ சுவாரசியமாய் நாங்கள் பேசி வந்ததால் என்னுடன் இருந்த மற்ற தம்பதியில் கணவரும் நானும் தான் கழுதையைப் பார்த்தது ஆனால் அந்த வேகத்தில் ப்ரேக் எல்லாம் போடுவது ஒன்றும் ப்ரயோஜம் இல்லாதது. நல்ல உயரமான கொழுத்த கழுதைதான், நான் இடிக்கும் முன்னர் அதன் கண்களை மட்டும் காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் பார்த்தேன் கழுதை இறந்திருக்குமாயிருக்கும். சாச்சா காரை நிறுத்தவில்லை அங்கே ஆனால் நிறுத்த வேண்டி வந்தது சீக்கிரமே. கழுதை இடித்த வேகத்தில் பேனட் கொஞ்சம் நசுங்கி குளிர்க்காற்று காருக்குள் வரத் தொடங்கியது.

வெளியில் 1 டிகிரி இல்லை 5 டிகிரிக்குள் இருக்கலாம் குளிர். தாங்கமுடியாமல் வண்டியை நிறுத்திப் பார்க்க பானட்டில் அடித்து பின்னர் ஒருபக்க கதவில் இடித்து கழுதை அப்பால் எறியப்பட்டிருந்ததை உணர முடிந்தது. இரத்தக் கறையெல்லாம் ஒன்றும் இல்லை ஆனால் கொஞ்சம் நசுங்கியிருந்தது வண்டி. ஹெட்லைட் ஒன்று காலி. வெளியில் வந்து பார்த்தால் கடுங்குளிர் முதுகுத்தண்டை சிலிருக்க வைக்கும் குளிர். ஆனால் வேறு வழியில்லை அந்த மற்றொரு டிரைவர் நண்பர் பானட்டை காருடன் சேர்த்துக் கட்டி ஒரு மாதிரி காற்று உள்ளே வராமல் இருக்கச் செய்தார். பின்னர் திரும்பவும் வந்து உட்கார்ந்து 100 மீட்டர் சென்றிருப்போம், பானட் மேலே வந்துவிட்டது ரோட்டை மறைத்தவாறு. நல்லவேளைக்கு ரோடு முழுவதும் காலியாக இருந்ததால் தப்பித்தோம் பின்னர் இன்னும் இரண்டு மூன்று கயிறுகள் போட்டு பானட்டைக் கட்டி பயணத்தை முடித்து காஷ்மீர் வந்து சேர்ந்தோம்.

அங்கே நடந்த காமெடி பற்றி அப்புறம் ஒரு நாள்.


சாச்சா





ஜம்முவின் landscape புகைவண்டியில் இருந்து


நாங்கள் பயணம் செய்த அம்பாஸிட்டர் - கழுதையை அடித்து தூக்கும் முன்




காஷ்மீரில் ரயில்வே ஸ்டேஷன் கொண்டு வருவதற்கான வேலைகள் நடக்கின்றன.