Thursday, January 24, 2008

காஷ்மீர் பயணம் - பெங்களூரில் இருந்து ஆக்ரா வரை




பயணம் தன்னந்தனியாய் என்று முடிவானதால் நான் திடமாய் இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறொன்றும் முக்கியமில்லை என்பதால் என்னை நானே திடப்படுத்திக் கொண்டிருந்தேன். முன்னுக்குப் பின் முரணாகத் தோன்றிய எண்ணங்களைச் சரிசெய்ய நினைத்து எண்ணங்களையே நெம்புகோளாக்கி சிந்தனைகளைப் புரட்டிப் போட்டு என் பயணத்தைத் தொடங்க முடிந்தாலும் கடைசிவரையிலுமே மரணம் பற்றிய பயம் தொடர்ந்து இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

பத்து நாட்களுக்கான உடைகள், "பின் தொடரும் நிழலின் குரல்" "சாய்வு நாற்காலி" "புதுமைப்பித்தன் சிறுகதைகள்" புத்தகங்கள், Lonely Planet India, காமெரா இவ்வளவே நான் எடுத்துக் கொண்டது. என்னுடைய ப்ளான் பெரிய லக்கேஜ் ஒன்றும் சிறிய காலேஜ் பேக் ஒன்றும் எடுத்துக் கொள்வது. பெரிய லக்கேஜை க்ளாக் ரூம்களில் போட்டுவிட்டு தேவைக்கானவைகளை மட்டும் சிறிய பையில் எடுத்துக் கொண்டு சுற்றுவது. பெரும்பாலான இடங்களில் இந்தத் திட்டம் பயனளித்தது.

பெங்களூரில் இருந்து கிளம்பிய கர்நாடகா எக்ஸ்பிரஸ், பெங்களூரில் இருந்து டெல்லி செல்வதிலேயே மோசமான ஒன்று என்பது நான் பயணம் செய்து முடித்த பின்னர் தான் தெரியவந்தது. ரயில்வே ஸ்டேஷனுக்குக் கிளம்பத் தொடங்கிய பின் தான் அல்சூரில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு ஆட்டோக்கள் இப்பொழுதெல்லாம் வருவதில்லை என்பது தெரியவந்தது. பின்னர் அக்காவை 'ஆக்டிவா' எடுத்துவரச் சொல்லி என் பெரிய லக்கேஜை எனக்கும் வைக்க இடமில்லாமல் கடைசியில் அட்ஜெஸ்ட் செய்து கொண்டு போனோம். எனக்கு சாதாரணமாகவே பெண்கள் வண்டி ஓட்டுவதைப் பார்த்து பயமாயிருக்கும். அன்றைக்கும் அப்படித்தான் அக்காவின் பின்னால் உட்கார்ந்து போகணுமா என்று பயந்து போனேன், ஆனால் வேறு வழியில்லாமல் அப்படியே வந்து சேர்ந்தேன்.

வரும் பொழுதே ரயில் வண்டியில் உடன் உட்காரப்போவது ஃபேமிலியாயிருந்ததல் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்று விவரித்துக் கொண்டு வந்திருந்தேன். கடைசியில் நான் சென்ற வண்டியில் கூட உட்கார்ந்து வந்துது ஒரு ஃபேமிலி தான், நான் சொன்ன அத்தனை அட்வான்டேஜ்களும் கிடைத்தாலும் இரவில் கூடுதலாய்க் கிடைத்தது 'குறட்டை' இதன் காரணமாக இரவெல்லாம் சரியான தூக்கம் இல்லாமல் பகலில் மேல் சீட்டைப் பிடித்து நன்றாக ஒரு ஆட்டம் உறங்கினேன்.

பின் தொடரும் நிழலின் குரலை எடுத்து வைத்து படிக்கத் தொடங்கியதில் சுவாரசியம் ஏற்பட்டு, இரயில் ஆக்ராவை அடையும் பொழுது 300க்கு சம்திங் பக்கங்களைப் படித்திருந்தேன். ஆனால் தொடர்ச்சியாக அல்ல பத்து பக்கம் படிப்பது பின்னர் அதைப் பற்றி யோசிப்பது இப்படியே தொடர்ந்தது. பின் தொடரும் நிழலின் குரல் புத்தகம் பற்றி மேலோட்டமாக ரிவ்யூ படித்திருந்ததால் புத்தகம் 'திணிக்கும்' கருத்துக்களைத் ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்ளாமல் ஒரு பக்கத்து கருத்தாக ஒப்புக் கொண்டிருந்தேன். இணையத்தில் ஸ்டாலின் பற்றி தேடி நிறைய படித்திருந்ததாலும், ஓரளவுக்கு கம்யூனிஸ்ட் போலி கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்ட் போன்ற வரிகளின் அர்த்தத்தை தேடிக் கண்டுபிடித்திருந்ததாலும் அது சாத்தியமானது.

உடன் வந்தது ஒரு டெல்லி ஃபேமிலியின் கணவன் மனைவி மற்றும் மகள், டிபிகள் ஹரியானா பொண்ணு என்பதால் பின் தொடரும் நிழலின் குரலை விட்டு கண்கள் அந்தப் பக்கம் நகரவில்லை. RACயில் ஒரு தமிழ் ராணுவ ஜவானும் ஒரு பெங்களூரு 'கால் சென்டர்' பெண்ணும் வந்தார்கள். அதில் அந்தப் பெண் கொஞ்சம் சைட் அடிக்கத் தேவலாம் ரகம் தான் என்றாலும் ரொம்பவும் நவீனமாக இருக்கும் பெண்ணைப் பார்த்தால் வரும் அலர்ஜி வந்ததால், அந்தப் பக்கம் அவ்வப்பொழுது திரும்பும் பார்வை வெகு சீக்கிரமாக மீள புத்தகத்தில் திணிக்க முடிந்தது. ஒரு கதை எழுதும் அளவுக்கு இந்த கவனிப்பு இருந்ததால் கவனிப்பு கதையாக வரும்.

கடைசி வரை ஆக்ராவில் இறங்குவதா டெல்லியில் இறங்குவதா என்ற முடிவு எடுக்கப்பட முடியாமலே இருந்தது. பின்னர் உடன் வந்த தமிழ் ஜவான் சொல்லி ஆக்ராவில் இறங்கினேன். ஆக்ரா கன்டோன்ட்மென்டில் இறங்கி தேவையானவற்றை பையில் மாற்றிக் கொண்டு க்ளாக் ரூமில் பெரிய லக்கேஜைப் போட்டுவிட்டு தாஜ்மஹாலை நோக்கி நகர்ந்தேன். வெளியில் வரும் பொழுது ஏறக்குறைய ஏழு மணியிருக்கும் அத்தனை கூட்டம் இல்லை, ரிக்ஷா வாலா 20 ரூபாய் என்று சொன்னது ஆச்சர்யப்பட்டுப் போய் ஏறி உட்கார்ந்தேன். ஏனென்றால் ஜவான் நாற்பது வரை கேட்பார்கள் என்று சொல்லியிருந்தது தான் ஆனால் சில நிமிடங்களிலேயே தெரிந்தது ஏன் 20 ரூபாய் என. உங்களை அந்த எம்போரியம் கூட்டிக் கொண்டு போறேன் இந்த எம்போரியம் கூட்டிக் கொண்டு போகிறேன் என்று சொல்ல நான் எல்லாவற்றையும் மறுக்க கடைசியில் அந்த ஆள் 40 ரூபாய் பணத்தில் வந்து நின்றார். பயணத்தை முதலிலேயே பிரச்சனையில் ஆரம்பிக்க வேண்டாம் என்று சரியென்று ஒப்புக் கொண்டேன்.

தாஜ் மஹால் கேட்டைத் தவிர்த்து வேறெங்கோ இறக்கிவிட முயன்ற அவரது முயற்சியை தவிர்த்து தாஜ்மஹால் கேட் அருகில் இறக்கிவிட வைத்தேன். இந்த ஒட்டுமொத்த சுற்றுப் பயணத்தில் ஆக்ரா ரிக்ஷா வாலாக்கள் போல் ஏமாற்றுபவர்களைப் பார்க்கவேயில்லை ஆக்ரா தாஜ் மஹாலுக்குப் போகிறவர்கள் ஜாக்கிரதை. அத்தனை சீக்கிரம் வந்தது எத்தனை நல்ல விஷயம் என்று தாஜ் மஹாலை விட்டு வெளியேறிய பொழுது தான் தெரிந்தது. தாஜ் மஹாலுக்குப் போகிறவர்கள் ஏழு மணிக்கு முன் சென்றுவிடுங்கள் இல்லாவிட்டால் ஒரு கிலோமீட்டர் தூர கியூவைத் தாண்டித்தான் உள்ளே நுழைய முடியும்.

















முன்னமே பார்த்தது தான் என்பதால் அத்தனை பெரிய வித்தியாசமில்லை என்றாலும் இந்த முறை அதன் பிரம்மாண்டமும் அழகாகப் பட்டது. நிறைய நேரம் புகைப்படம் எடுக்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன் பின்னர் புகைப்படம் எடுக்க ஆரம்பித்ததும் தான் தாமதம், மூன்றாம் கண் மட்டும் தான் வேலை பார்த்தது. எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தாலும் தாஜ்மஹால் அலுக்கவே அலுக்காது என்று தெரிந்தவன் ஆகையால் என்னை நானே வெளியில் தள்ளிக் கொண்டு வந்தேன்.

அடுத்து ஆக்ரோ கோட்டைக்கு போவதற்கு மனம் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் காமெராவிற்காக அங்கேயும் சென்று வந்தேன். ஆக்ரா கோட்டையில் நுழையும் பொழுதெல்லாம் ஏக வெய்யில், டிசம்பர் மாத குளிர்காலத்தில் ஆக்ரா கோட்டை வெய்யில் அழைத்து வந்து வியர்வையில் குளிப்பாட்டியது. இதை நினைக்கும் பொழுது ஒரு சுவையான சம்பவம் நினைவில் வருகிறது என் ஒன்றரை ஆண்டு டெல்லி அனுபவமாகட்டும், என் சித்தப்பாவும் மற்ற நண்பர்களும் சொல்லிக் கேட்பதாகட்டும். டெல்லிக்கு மே மாத விடுமுறையில் வருபவர்கள் தேர்ந்தெடுத்து ஆக்ரா அழைத்துப் போக வற்புறுத்துவதையும் வின்டரில் வரும் உறவினர்கள் சிம்லாவிற்கு அழைத்துச் செல்ல வற்புறுத்துவதையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பல சமயங்களில் நாம் மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதில்லையில்லையா அதுமாதிரிதான் என்று நினைத்துக் கொண்டேன். பின்னர் ஆக்ரா கோட்டை படப்பிடிப்பு(:)) முடிந்ததும் ஆக்ரா ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து தாஜ் எக்ஸ்பிரஸில் டெல்லி செல்வதற்கு வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் ஒன்றை வாங்கிக் கொண்டு பேசாமல் உட்கார்ந்திருந்தேன் வேடிக்கை பார்த்தவாறு. ஆனால் நான் எதிர்பார்க்காத வண்ணம் தாஜ் எக்ஸ்பிரஸ் இரண்டாவது ஸ்டேஷனிலேயே முழுவதுமாக நிரம்பிவிட, பின்னர் ஒரு மூன்றரை மணிநேர பயணத்தை நின்று கொண்டே தொடர்ந்தேன்.

தமிழ்நாட்டிலிருந்த வந்திருந்த ஒரு பெரிய கல்லூரி கும்பல் பாடிக் கொண்டு விளையாடிக்கொண்டு வந்ததால் பெரிய அளவில் களைப்பெதுவும் தெரியாமல் டெல்லி வந்து சேர்ந்தேன் ஒரு வழியாய்.