Tuesday, July 31, 2007

Tour de Wayanad

வழக்கம் போல் இந்த முறையும் மூன்று மணிக்கு மீட்டிங் பாய்ண்ட் வரவேண்டும் என்று நண்பர் சொல்லியிருந்தார். நானிருக்கும் அல்சூரில் இருந்து ஜெயநகர் 4 ப்ளாக்கிற்கு என் வண்டியில் வந்து அங்கே என் பைக்கை ஓரங்கட்டி விட்டு நண்பருடைய வண்டியில் கிளம்ப வேண்டும். எல்லாம் சரியாக நடக்க நாங்கள் மொத்தம் ஏழுபேர், ஆறுவண்டியில் 3.00 மணி சனிக்கிழமை காலையில் கிளம்பினோம். நண்பர் அவருடைய வீட்டிற்கு சென்றிருந்த பொழுதுதான் என்னிடம் நாம் வயநாட் போகிறோம் என்ற விஷயத்தைச் சொன்னார். சொல்லப்போனால் இது ப்ளானில் இருந்த டூர் தான்; ஆனால் நான் என் சொந்த வண்டியில் செல்வதாய் உத்தேசித்திருந்த ஒன்று.

ஜெயநகரில் இருந்து பன்சங்கரி வழியாக மைசூர் ரோட்டை பிடிக்கும் வரை கொஞ்சம் போல் மெதுவாய் சென்றவர்கள் மைசூர் ரோட்டில் வேகமெடுத்தார்கள். இந்த பைக்கிங் க்ரூப் ஒரு ஃபார்மேஷனிலேயே செல்வார்கள் என்பதால் பெரும்பாலும் 90 - 100 KM/Hourல் செல்வார்கள். Bullet மற்றும் Karizma வின் ஒளிவிளக்குகள் நன்றாய் இருக்குமாதலால், மீதமிருந்த மூன்று Pulzar'கள் இவர்களின் பின்னாலே பெரும்பான்மையான இரவு நேரங்களில் வருவார்கள். அதைப்போலவே முன்சொன்ன வண்டிகளின் வேகமும் பல்ஸரை விடவும் அதிகம்.

இந்த க்ரூப்பில் ஒரு நபர் ஏற்கனவே இதே போன்ற ஒரு பயணத்தைச் செய்தவன் ஆகையாலும், இந்த வழி பெரும்பாலும் நேர் பாதையாக இருந்ததாலும் பயணம் இலகுவாகவேயிருந்தது. பெங்களூரில் கிளம்பிய எங்களுடைய அடுத்த ஸ்டாப் மாண்டியா, பின்னர் மைசூர், கிட்டத்தட்ட பெங்களூரில் இருந்து 120 KM இருக்கும். பின்னர் அங்கிருந்து நஞ்சாக்குட் குண்டல்பேட் வழியான பயணத்தில் கர்நாடக - கேரள வனப்பகுதி வரும். பண்டிப்பூர் வனவிலங்குப் பூங்கா இங்கேதான் இருக்கிறது.

சாருநிவேதிதா எழுதியிருப்பார் இந்த ஊரில் பைக்கையும் பைக் ஒட்டுவதையும் ஒரு விஷயத்தோடு(ஹிஹி நான் சொல்லலை) ஒப்பிட்டு; சாதாரண வண்டி ஓட்டுபவர்களுக்கே இப்படி என்றால் என்னுடன் பயணம் செய்த நண்பர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகவே கேரளா செல்பவர்கள் அவர்களுக்கு எப்படி. அங்கங்கே நிறுத்து வாகனங்களை புகைப்படம் எடுத்தவாரே இருக்கும் எங்கள் பயணம்.

இந்தக் காட்டுப் பகுதியில் கூட ரோடு பிரம்மாதமாகயிருந்தது இருநூறு மீட்டர்கள் கொஞ்சம் ஒரு மாதிரியாக இருந்தாலும் நல்ல ரோடுதான். பெங்களூர் - மாண்டியா - மைசூர் - குண்டல்பேட் - கேரளா வரை ரோட் பிரம்மாதமாகயிருந்தது. கர்நாடக காட்டுப் பகுதியும் கேரள காட்டுப்பகுதியும் அருமையாக இருந்தது. கர்நாடகக் காட்டுப் பகுதியைத் தாண்டும் பொழுது தென்பட்ட யானைகளை புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள் நண்பர்கள். பொதுவாக யானைகள் கூட்டமாகயிருந்தால் ஒன்றும் செய்யாதுதான் என்றாலும்; அதில் ஒரு குட்டி யானை இருக்கப் போக அது புகைப்படம் எடுத்த நண்பரைத் துரத்த விழுந்தடித்து நண்பர் வந்து சேர்ந்தார்.

ஃபார்மேஷனில் கடைசியாக வந்தவர் என்பதாலும்; ஏகப்பட்ட வளைவுகளுடன் கூடியதாக இருந்ததாலும், நண்பர் யானைக்கூட்டத்தை தன் எக்ஸ்ரே கண்களால் கண்டுபிடித்திருந்ததாலும் நாங்கள் பார்க்கவில்லை. பின்னர் ஆளைக் காணோம் என்று திரும்பி வந்து பார்க்க நண்பர் சேற்றில் விழுந்து எழுந்து வந்திருந்தார். எனது அலுவலகத் தோழர் நானும் சென்று இப்போதே யானையைப் பார்க்கவேண்டும் என்று வற்புறுத்திய போதும்; அவரை இழுத்துக் கொண்டு வந்தோம். கர்நாடக எல்லையைக் கடந்து கேரள எல்லைக்குள் நுழையும் இடத்தில் இருந்த செக்யூரிட்டி கார்ட்கள். ஏற்கனவே யானையைக் காண்பிக்காமல் வருவதால் கோபமாக இருந்த நண்பரிடம். "நைட்டு ஒரு பர்டிக்குலர் நேரத்திற்கு ஒரு புலியொன்னு இந்தப் பக்கம் வரும்"னு சொல்லப்போக ஹோட்டலில் செக்கின் செய்துவிட்டு பால்ஸ் ஒன்றிற்கு போய்விட்டு இங்கே இரவு வருவதாக நண்பர்களில் சிலர் முடிவெடுத்தார்கள்.

புலி தன்னுடைய எல்லை விஷயத்தில் ரொம்பவும் சரியாய் இருக்குமாம்; தன்னுடைய எல்லைக்குள் இன்னொரு புலியின் ஆதிக்கம் இருக்கிறதா இல்லையா என்று வெரிஃபை செய்வதற்காக இரவு நேரத்தில் சுற்றும் என்றும் அந்த கார்ட்கள் சொன்னார்கள். நானோ வெள்ளிக்கிழமை இரவு சினிமா பாரடைசியோவில் எடுத்துவந்த உலக சினிமாக்கள் இரண்டை(The scent of the green papaya, We of the never never )பார்த்துவிட்டு ஒரு மணி நேர உறக்கத்தில் பயணம் செய்யத் தொடங்கியதாலும்; புல்லட்டில் இருந்து கீழே விழுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இல்லாததாலும் தூங்கிக்கொண்டே வந்து கொண்டிருந்தேன். அதனால் என்னுடைய அன்றைய இரவு ப்ளான் முழுவதுமாக தூங்குவது தான்.கர்நாடக எல்லையைக் கடந்து கேரள எல்லைக்குள் நுழைந்ததும் கொடுத்துவைத்தது போல் அருமையான சாரல் வீசத் தொடங்கியது. அதிலிருந்து நாங்கள் எங்களுடைய இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு கிளம்பும்வரை சாரல் - கொஞ்சம் மிருதுவான மழை மட்டும் தான் பெய்துகொண்டிருந்தது. எல்லோரும் பயமுறுத்தினார்கள் வயநாட்டில் ஏகமாய் மழை பெய்வதாய்; ஆனால் அப்படி ஒன்றும் இல்லை.
நண்பர் முன்பே வந்தவர் என்பதால் Sulthan Batheryல் அருமையான ஒரு ஓட்டலை நோக்கியிருந்தது எங்கள் பயணம். 3 பெட்ரூம் அறைகள் 500 ரூபாய்க்கு, நல்ல ஓட்டல் அறைகள் டீவியுடனும் கீழே ரெஸ்டாரண்ட் உடனும்; ஹோட்டல் ரீஜன்ஸி இருப்பது சுல்தான் பத்தேரியிலேயே. ஆயுர்வேதிக் மஸாஜும் செய்யப்படும் என்று சொல்லியிருந்தார்கள்; ஒரு மணிநேரம் கிடைத்தால் செய்து கொள்ளலாம் என்று தான் நினைத்திருந்தேன் ரொம்பவும் பிஸி ஷெட்யூலாகப் போய்விட்டதால் முடியவில்லை. இன்னொரு நினைத்து முடியாமல் போன விஷயம் லாலேட்டனின் Hallo படம். ஹோட்டலுக்கு எதிர்த்தார்ப்போலவே தியேட்டர், ஆசீப்பை வம்பிழுக்கவாவது படம் பார்க்கணும் என்று நினைத்திருந்தேன்; முடியவில்லை.

போய்ச் சேர்ந்ததும் சின்ன குளியல் ஒன்றைப் போட்டுவிட்டு அனைவரும் அரைமணிநேரத்தில் ரெடியானார்கள். நாங்கள் அன்று ஒரு அருவிக்குப் போகப்போகிறோம் என்ற ப்ளான் சொல்லப்பட்டிருந்தது அப்படியே இன்னும் இரண்டு இடங்கள். இங்கிருந்து தொடங்கியது தான் என்னுடைய "கடவுளின் தேசத்திற்"கான பயணம். அருமையான லாண்ட்ஸ்கேப் எல்லாவற்றையுமே நிறுத்து புகைப்படம் எடுக்கும் ஆர்வம் எனக்கிருந்தது. ஆனால் நிறுத்திய இடங்கள் மிகவும் குறைவு(Budd Break க்காமாம் ;-)).

சில விஷயங்களை விவரிக்க முடியாதென்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அப்படிப்பட்ட ஒன்று தான் என்னுடைய இந்தப் பயணமும். சோகமாகவும் சந்தோஷமாகவும் மாறி மாறி இருப்பேன் என்று என்னுடைய நண்பர்கள் அடிக்கடி என்னிடம் கம்ப்ளெய்ண்ட் செய்வார்கள். ஒன்றிலிருந்து இன்னொன்றாய் மாற எனக்கு அவகாசம் அதிகம் பிடிப்பதில்லை அதைப் போலவே காரணமும். ஆனால் எல்லாவற்றையும் கடந்து நான் சந்தோஷமாகயிருந்தேன் இந்தப் பயணத்தின் பொழுது.

சுல்தான் பத்தேரியிலிருந்து 40KMல் இருக்கிறது நாங்கள் சென்ற சோச்சிபூரா(சரிதானா) நீர்வீழ்ச்சி. இந்தப் பகுதியில் இருக்கும் மீன்முட்டி நீர்வீழ்ச்சி தான் ரொம்பவும் பிரபலமானது என்றாலும் ஒரு வாரம் பெய்த தொடர்ச்சியான மழையால் அந்த நீர்வீழ்ச்சிக்குப் போகும் வழிகள் இல்லாமல் போனதால் இந்த நீர்வீழ்ச்சிக்கு வந்திருந்தோம். முன்பே ப்ளான் செய்தது போல் நீர்வீழ்ச்சிக்கு போகும் முன்பே சாப்பாட்டிற்குச் சொல்லிவிட்டுச் சென்றோம். அதனால் நாங்கள் குளித்துவிட்டு வந்ததும் சூடான(சுவையான இல்லை ;-)) சாப்பாடு கிடைத்தது.

இதில் பயணம் செய்த பெரும்பாலான நண்பர்களுடன் நான் முன்பே முத்தத்தி சென்றிருந்ததால் எனக்கு யார் யார் உள்ளே இறங்குவார்கள் என்று தெரியும். மேலும் பயமுறுத்திவிட்டதால் நண்பர்கள் பக்கத்தில் கூட வரமாட்டேன் என்று சொல்லி காலைக்கூட நனைக்காமல் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் சுல்தான் பத்தேரியில் இருந்து சோச்சிபாரா நீர்வீழ்ச்சி வரை சூப்பரான டிரவை செய்து கொண்டு வந்திருந்தார்கள்; அவர்களுக்குத் தேவையானது அதுதான் நீர்வீழ்ச்சி இரண்டாவது விஷயம். 80KM வேகத்தில் அந்த மலைமுகடுகளில் பயணம், ரிஸ்க் தான் என்றாலும் பிரம்மாதமான அனுபவம்.(அவர்கள் ரொம்பவும் செக்யூர்டா வண்டி ஓட்டுவார்கள் - வேகம் என்றாலும் சேஃப்டி இருக்கும்)நாங்கள் நான்கு பேர் அருவியில் இறங்கிவிட்டு வந்ததும் கிளம்பினோம் சாப்பாடு அந்தப் பசிக்கும் அந்த இடத்திற்கும் ஏதுவாய் இருக்கு சாப்பிட்டு முடித்து திரும்பவும் ஹோட்டலுக்கு வரவே நாங்கள் நினைத்ததை விடவும் நேரமாகிவிட்டதால் மற்றவர்களுடைய புலி பார்க்கும் ப்ளான் கேன்ஸலாகியிருந்தது. அங்கே போய்ச் சேர்ந்ததும் எனக்கும் சரியான தூக்கம் வந்ததால் நானும் லாலேட்டன் படத்தை டிராப் செய்து(அண்ணாச்சி தப்பிச்சீங்க) தூங்கிப்போனேன். சொல்லப்போனால் 12 மணிநேரம். காலை ஒன்பது மணிக்கு எழுப்பி காண்பித்தார்களே போட்டோக்கள் பயந்தே போயிருந்தென். அந்த புலி பார்க்கும் க்ரூப் காலையில் 5.30 க்கு எழுந்து மீண்டும் 50 KM பயணம் செய்து கர்நாடகா-கேரளா பார்டருக்கு சென்றிருக்கிறது அங்கே யானைகளுடன் நடந்த அனுபவம். படங்களுடன் அடுத்தப் பதிவு.

இந்தப் பயணத்தைப் பற்றிய என்னுடைய முந்தைய ஜல்லிக் குறிப்பு - கடவுளின் தேசம்

இன்னும் நிறைய படங்கள் - Wayanad photos

Monday, July 30, 2007

Wayanad photos

ஏகப்பட்ட படங்கள் போட்டிருக்கிறேன்; கொஞ்சம் போல் நேரம் எடுக்கலாம்.