Thursday, May 24, 2007

பயணம் சில குறிப்புக்கள்

நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது தான் என்று நினைக்கிறேன். எங்கள் வீட்டை விட்டு வெளியில் வந்து இன்னொரு வீட்டில் தங்க ஆரம்பித்தது. அதற்கு முன் வரை பயணம் என்று பெரிதாக ஒன்றையும் நான் செய்திருந்ததில்லை. எல்லாம் ஆரம்பித்தது அந்த வருடத்தில் தான் என்று சுலபமாகச் சொல்லலாம். அதற்குப் பிறகு நிறைய செய்திருக்கிறேன்.

அப்பொழுதெல்லாம் டைரி எழுதும் பழக்கமும் பெரும்பாலும் கிடையாது என்பதால், அத்தனை அழுத்தம் திருத்தமாக நடந்தது என்ன என்று எழுத முடியாவிட்டாலும். இன்றும் பசுமையாகவே நினைவில் இருக்கின்றன பெரும்பான்மையான என்னுடைய பயணங்கள். எல்லாவற்றையும் பற்றி எழுதவேண்டுமென்றோ முடியுமென்றோ நினைக்காவிட்டாலும். இன்றிருக்கும் நினைவுகள் இன்னும் இருபது வருடங்களில் இருக்கும் வாய்ப்புக்கள் குறைவு என்பதால் எழுதிவைப்பது, பிற்காலத்தில் மழைப் பொழுதுகளின் போது சூடாக தேநீர் அருந்தும் இனிமையைத் தரும் என்பதால் இரண்டு வரி எழுதிவைக்கவே விரும்புகிறேன்.

பயணங்களைப் பற்றி சுவையாக எழுதியவர் என்றால் எனக்கு தற்சமயங்களில் எல்லாம் நினைவில் வருபவர் எஸ். ராமகிருஷ்ணன் தான். எழுதியதை விடுத்து உற்சாகமாக கதைத்தவர் என்றால் நான் என்னுடைய அறைத் தோழன் ஞானசேகரைக் குறிப்பிட முடியும். பொங்கும் உற்சாகத்துடன் பையன் தன்னுடைய பயணங்களைப் பற்றி பேசுவான். நாங்கள் ஏறக்குறைய நான்கு மாதங்கள் ஒன்றாகயிருந்திருக்கிறோம் என்றாலும் பெரும்பாலும் பேசிய விஷயங்கள், பயணங்களைப் பற்றியும், சினிமா புத்தகங்களைப் பற்றியுமே இருக்கும்.

புகைப்படங்களாலும் வீடியோக்களாலும் மட்டுமே நிரப்பப்படுவதாக இல்லாமல் நல்ல எழுத்துக்களால் என்னுடைய பயணப் பக்கங்கள் நிரப்படவேண்டும் என்றே விரும்புகிறேன்.

1 மறுமொழி:

சொன்னது...

பயணிப்பதில் தீராத மோகம் கொண்ட யாத்ரீகன் நான். பயணக்கட்டுரைகள், வாசகனை அந்த இடத்திற்கு இழுத்துவரச் செய்ய வேண்டும் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை. தொடர்ந்து எழுதுங்கள். சமயம் கிடைத்தால் ஒரு நடை வாருங்கள் http://selventhiran.blogspot.com