Wednesday, May 23, 2007

கங்கை கொண்ட சோழபுரம் - பயணம்

அப்பொழுதுதான் எங்கள் கல்லூரி இறுதித் தேர்வு முடிந்திருந்தது. கல்லூரி வாழ்வில் அனைவரும் பேர்வெல் பார்ட்டி கொண்டாடியிருப்பீர்கள். ஆனால் நாங்கள் (நான் மற்றும் என் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர்) கொண்டாடவில்லை. எங்களுக்குத் தெரியும் அந்தக் கல்லூரியில் நாங்கள் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லையென்று. அதாவது நாங்கள் அந்தக் கல்லூரியை பிரிவதற்காக வருந்தவேயில்லை. நாங்கள் ஏற்கனவே முடிவெடுத்திருந்ததைப் போல் ஒரு சுற்றுப்பயணத்தைத் தொடங்கினோம்.

2003 மேயிலிருந்து அடுத்த 2004 மே வரை நான் ஊர் சுற்றியது மிகவும் அதிகம். முதலில் என் கல்லூரி நண்பர்களுடனான பயணம். நாங்கள் அனைவரும் முதலில் திருச்சியிலிருந்து கிளம்பி பிரபுவின்(துறையூர்) வீட்டிற்கு வந்திருந்தோம். முதலில் எங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம், மொத்தம் ஆறு பேர், நான், ராஜேஷ், உதயசங்கர், பிரபு, பார்த்திபன், ராஜாமணி. இதில் பிரபுவையும் ராஜாமணியையும் தவிர்த்து எங்கள் அனைவருக்கும் எந்த பேப்பர்களும் பாக்கியில்லை. கொஞ்சம் நன்றாய் படிக்கும் சொம்பு கும்பல் என்று கூட வைத்துக் கொள்ளலாம் ஆனால் நான் அதில் சேர்ந்தது தான் ஆச்சர்யமே. நன்றாய் படிக்க மாட்டேனா என்றால் அப்படியில்லை. கொஞ்சம் ரௌடி, ஒரு முறை கல்லூரி நிர்வாகம் கண்டிப்பாய்ச் சொல்லியிருந்தும், லீவ் போட்டுக்கொண்டு பெங்களூர் வரை வந்து ஊர் சுற்றியதால் ஹாஸ்டலில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தேன் அது வேறு ஒரு கதை.

ஒரு முறை கல்லூரியிலிருந்து "பார்ட்" பெஸ்டிவலிற்கு பேச்சுப்போட்டியில் கலந்து கொள்வதற்காக வைக்கப்பட்ட போட்டியில் நான் வெற்றி பெற்றிருந்தும் மேலாளர் சொன்னார் என்பதற்காக வேறொரு பெண்ணை அனுப்பிவிட கல்லூரியின் அனைத்து தமிழ்ச்சங்க பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொண்டேன், அந்த நாட்களில் இது ஒரு பெரும் பிரச்சனையாய் இருந்தது. இப்படியாக நன்றாய்ப் படித்துக் கொண்டும் வம்பிழுத்துக் கொண்டிருந்ததால் கொஞ்சம் இல்லை நன்றாகவே கெட்டப்பெயர் வாங்கியிருந்தேன்.

வந்துட்டேன் பயணத்திற்கு, இப்படியாக நாங்கள் சுற்றுலாவை துறையூரிலிருந்து தொடங்கினோம், பிரபுவின் வற்புறுத்தலுக்காக மட்டுமே துறையூர் வந்திருந்தோம் ஏற்கனவே பார்த்த ஊர், பார்த்த இடங்கள். இருந்தாலும் புளியஞ்சோலை என்ற பெயர் மனதின் ஓரத்தில் அனைவருக்குமே அறித்துக் கொண்டிருந்ததால் வந்து சேர்ந்த இரவு பிரபுவின் வீட்டில், டைட்டானிக் படம் பார்த்தோம். ஆமாம் பிரபு காதலித்துக் கொண்டிருந்தான். புளியஞ்சோலையில்லாமல் நாங்கள் துறையூர் வந்ததற்கு இன்னொரு காரணம் அவன் காதல். அந்தப் பெண்ணை எங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் பேர்வழியென்று கூப்பிட்டுவந்திருந்தான் எங்களை. அது ஒரு பெரிய தமாசு.




காலையில் நாலரை மணிக்கெல்லாம் எழுந்து பார்த்தால், கிராமமே எழுந்திருந்தது. வாழ்க்கையில் நான் முதன்முதலில் ஒரு கிராமத்தை நினைவு தெரிந்து பார்த்தேனேயானால் அது துறையூர் தான். பிரபுவின் அம்மா காலையில் எழுந்து எங்களுக்கெல்லாம் காப்பி போட்டுக் கொடுத்துவிட்டு நாங்கள் கிணற்றில் குளித்துவிட்டு வருவதற்குள். ஆறு பேருக்கும் எலுமிச்சை சாதம் தயார்செய்து வைத்திருந்தார்கள். இன்று சொல்கிறேன், அவர்கள் எலுமிச்சை சாதம் செய்து தருவதாகச் சொன்னால் வேலைப் பளுவின் இடையிலும் புளியஞ்சோலை சென்றுவரத் தயாராயிருக்கிறேன்.

புளியஞ்சோலை என்று நான் சொன்ன ஊரை உங்களில் பெரும்பால் ஆனவர்களுக்கு தெரிந்து வாய்ப்பிருக்கிறது. அது ஒரு மலையடிவாரம், அங்கே ஆறு மலைமேலிருந்து ஒடிவருகிறது. மிக ரம்மியமான இடம், ஆனால் கொஞ்சம் மோசமான இடமும் கூட, திருச்சி காதலர்களுக்கான இடங்களில் புளியஞ்சோலையும் ஒன்று. காலையில் ஓட்டிக்கொண்டுவந்து விட்டு சாயங்காலம் திரும்பும் ஓட்டிக்கொண்டு போவதை அனாயாசமாகப் பார்க்கலாம்.

நாங்கள் நன்றாய் மலையில் உள்வரை சென்று அருமையாக கலக்கப்படாமல் இருந்த ஆற்றுநீரை ஐந்துமணிநேரம் கலக்கிவிட்டு, பின்னர் எடுத்த பசியில் கொண்டு வந்திருந்த எலுமிச்சை சாதத்தை முடித்திருந்தோம். இந்த விஷயத்தில் பெரியவர்களின் அனுபவம் ஆச்சர்யம் அளிக்கும். நாங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் பிரபுவின் அம்மா கட்டிக்கொடுத்த அதிகப்படியான சாதம் எங்களுக்கு சொல்லப்போனால் மிகச்சரியாக இருந்தது.



இப்படியாக நாங்கள் புளியஞ்சோலை பயணத்தை முடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்த ஊர், ஜெயங்கொண்டம், இது பார்த்திபனுடைய சொந்த ஊர். அவர்கள் வீட்டில் தறிநெய்வது தான் தொழில். அம்மா அப்பா தம்பி, தங்கை சில சமயங்களில் பார்த்தியும் நெய்வதுண்டு என்று சொல்ல எங்கள் அனைவருக்கும் நாங்களும் நெய்ய வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. ஆனால் அதையெல்லாம் சொல்லி அவர்கள் பிழைப்பை கெடுத்து விடாமல் தவிர்த்துக் கொண்டோம்.

இன்னுமொரு விஷயம் பயணத்தை தவிர்த்து, நாங்கள் அனைவரும் கல்லூரி படிப்பவர்கள் எங்கள் வீடுகளும் அத்துனை வசதியானது கிடையாது, அதுவும் கல்லூரி படிக்கும் ஆறு தடிமாடுகளுக்கு சாப்பாடு ஆக்கிப்போடுவதென்பது சாதாரணமான விஷயம் கிடையாது. அதனால் நாங்கள் பயணத்தின் ஆரம்பத்திலேயே கணக்குப்போட்டுக் கொண்டது. யாருடைய வீட்டிலும் சாப்பிடுவது இல்லையென்று. ஆனால் பிரபுவின் வீட்டிலேயே இந்த விரதம் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் புளியஞ்சோலையில் சாப்பிட வேறு இடம் கிடைக்காது என்ற காரணத்தால் அது ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.

காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து விட்டு தயாராகிவிடவேண்டும், பெரும்பாலும் இரவுகளில் தூங்குவதில்லை சீட்டுக்கட்டு(ஏஸ்) ஆட்டம் போடத் தொடங்கினால் அது முடிய இரண்டு மணிநேரம் ஆகும் பிறகு பிரபுவை வம்பிழுக்க ஆரம்பித்தோமானால் ஒரு வழியாக நாங்கள் தூங்க மூன்று மணியாகிவிடும் பிறகு ஒரு மணிநேரத்தில் எழுந்து கிளம்பிவிடவேண்டும். வேண்டுமானால் தங்கும் வீட்டில் காப்பி சாப்பிடாலாம்.

ஆனால் நாங்கள் சாப்பிடுவதைப் பார்க்க வேண்டுமே, எப்படியும் அந்த ஊரை தெரிந்தவன் ஒருவன் இருப்பான் என்பதால் அவனிடம் கேட்டுக்கொண்டு அன்லிமிட்டட் மீல்ஸ் கிடைக்கும் கடைக்குச் சென்றுதான் சாப்பிடுவது, காலை மதியம் இரண்டிற்கும் சேர்த்து ஹோட்டலில் சாப்பாடு சமைத்து தயாரான பதினொன்று மணிவாக்கில் உட்கார்ந்தோமானால் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டுத்தான் நகர்வது.



ஜெயங்கொண்டத்தில் இன்னொரு விஷயமும் நடந்தது அது, பார்த்திபனின் வீட்டிற்று பக்கத்தில் ஜோசியக்காரர் ஒருவர் வீடும் இருந்தது. பார்த்தின் வற்புறுத்தி அனைவரும் ஜோசியம் பார்க்கவேண்டும் என்று சொல்லிவிட என்னைத் தவிர்த்த அனைவரும் பார்த்தனர்.

பின்னர் நாங்கள் வந்திறங்கிய இடம் தான், ஜெயங்கொண்ட சோழபுரம் எங்கேயோ கேள்விப்பட்ட பெயர் போல் தெரிகிறதா, அதுதான் கங்கை கொண்ட சோழபுரம். ராஜேந்திரன் அதாவது ராஜராஜனின் மகன் கட்டியக் கோவில், தந்தைக்கும் மகனுக்கும் என்ன காண்டு என்று தெரியாது. அப்பனைப் போலவே மகனும் பிரம்மாண்டமாய் ஒரு கோவில் கட்டியிருந்தான்.

ஆரம்பத்தில் மிகவும் மோசமாக பராமரிக்கப்பட்டு இருந்ததாகவும் தற்சமயம் இந்திய தொல்பொருள் துறையினரிடம் இருப்பதலால் கொஞ்சம் நன்றாய் இருப்பதாகவும் பார்த்திபன் சொன்னான். வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்தக் கோவிலை பார்த்தே ஆவது என நான் ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்ததால், அவனுடைய அப்பா போட்டுக் கொடுத்த பிளானையை கொஞ்சம் மாற்றி கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வந்திருந்தோம்.

அழகான அமைதியான ஊர், புல்வெளிகளுக்கு மத்தியில் சிவன் கோவில். மற்றவர்கள் ரொம்பத் தீவிரமாக சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க நான் சுற்றிப் பார்த்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.

அந்தக் கோவில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்தைப் பற்றி சிறு அறிமுகம்.

உடையார்ப் பாளயம் தாலுகாவில் 16 மைல் நீளத்திற்கு வடக்குத் தெற்காக ஒரு கரை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், வலிமை வாய்நத பல பெரிய கலிங்குள் உள்ளன. இது முன் காலத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். இந்தப் பெரிய குளம் அல்லது ஏரிக்குக் கொள்ளிடம் ஆற்றிலிருந்து ஒரு கால்வாய் அதனுடைய தென் கோடியில் இந்த ஏரிக்குள் நுழைகிறது. இதுவே இந்த ஏரியின் முக்கியமான வருவாய்க் காலாகும்.

ஏரியின் வடபகுதியில் நுழையும் ஒரு சிறு கால்வாய் வெள்ளாற்றின் நீரையும் இங்கு கொண்டு வருகிறது. இந்த ஏரி தூர்ந்து விட்டதால், பல ஆண்டுகளாக அது எவ்விதத்திலும் பயன்படவில்லை. அந்த ஏரியின் நடுப்பகுதி முழுவதிலும் உயர்ந்த அடர்த்தியான புதர்களும் குறுங்காடுகளும் நிறைந்து பாழாகிவிட்டது. இந்த ஏரி, படையெடுத்து வந்த ஒரு படையினர் வேண்டுமென்றே செய்த கொடுஞ்செயலால் அழிந்து விட்டதாகத் தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டுவருகிறது.

ஏரியின் தென் கோடியில் காடு சூழ்ந்த ஒரு கிராமம், கங்கைகொண்டபுரம் என்னும் பெயரால் இருந்து வருகிறது. அதன் சுற்றுப்புறத்தில் மிகப்பெரிய அளவினதும், அரிய வேலைப்பாடு உடையதுமாகிய ஒரு கோயில் இருக்கிறது. அதற்கு அருகே காடுசூழப்பட்ட பகுதியில் பழைய கட்டடங்களின் எஞ்சிய பகுதிகள் உள்ளன. மலை மேடுகள் போலவும் குவியல்கள் போலவும் உள்ளன.

இவை பழங்காலத்து பாபிலோனை நினைவுப் படுத்துகின்னற. மிகப் பரந்த பகுதியில் அழகிய ஒரு அரண்மணை இருந்தது என்றும் அதன் பல்வேறு பகுதிகள் தான் இவ்வாறு இடிபாடுகளாகக் காட்டியளிக்கின்றன என்றும் கிராமத்திலுள்ள முதியோர் சொல்கின்றனர்.

இந்த அரண்மனை இருந்த காலத்தில் கங்கைகொண்டபுரம் முடியடைய மன்னர் ஒருவரின் செல்வமுக் செழிப்பும் நிறைந்த தலைநகராக விளங்கியது. இப்போது ஒற்றையடிப்பாதை ஓட இல்லாத காடாகக் காட்சி தரும் பகுதியில் மைல் கணக்கான பெரும்பரப்புக்கு இந்த ஏரி வளத்தை வாரி வழங்கிற்று.

இந்த மாபெரும் அணையை மீண்டும் கட்டவேண்டும் என்று அடிக்கடி பேசப்பட்டு வந்திருக்கிறுது.

என்று 1855 ம் ஆண்டில் வெளியான ஸ்தல சஞ்சிகை ஒன்று நினைவு கூர்கிறது.

இவ்வாறெல்லாம் நினைவுகூறப்படும் கங்கை கொண்ட சோழபுரம், இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இம் மன்னனை பற்றிய ஒரு சிறு குறிப்பு, தற்போதைய சென்னை, ஆந்திரம் பகுதிகளுடன், மைசூரின் ஒரு பகுதியையும், ஈழத்தையும் உள்ளிட்ட ஒரு பரந்த நாட்டை இவனது தந்தை இவனுக்கு விட்டுச் சென்றான். அரசாங்க நிர்வாகம் மிகுந்த கவனத்துடன் நிறுவப்பட்டதுடன். பெருநிலப்பிரபுக்கள், சிறு விவசாயிகள், தொழிற்குழுக்கள் ஆகிறோரது உரிமைகளைப் பாதுகாக்கவும். அதே சமயம் மன்னனது அமைதியையும் சமூக உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் வலிமைமிக்க ஒரு அதிகாரவர்க்கமுக் உருவாக்கப்பட்டது. நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட வீரரைக் கொண்ட படை ஒன்று நாட்டின் விரிந்த எல்லையைக் காக்கும் திறன் பெற்றிருந்ததோடு.

புதிதாகக் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் எழும் எதிர்ப்புக்களை அழிக்கவும் வெளிநாடுகளைக் கைப்பற்றவும் உதவி புரிந்தது. ஈழம், மாலத்தீவுகள் போன்ற கடல் கடந்த நாடுகளைக் கைப்பற்றிய பின், அவற்றைத் தம் அதிகாரத்திற்குள் நீடித்திருக்குமாறு செய்ய அவன் ஒரு சிறந்த கடற்படையும் வைத்திருந்தான்.

இக்கடற்படை உதவியுடன் கிழக்கிந்திய தீவுகளுடனும், சீனத்துடனும் ஏற்பட்ட வாணிகத்தையும் பாதுகாக்க முடிந்தது. இவற்றைப் பயன்படுத்தி ஆட்சி செய்த 33-ம் ஆண்டுகளில் இராஜேந்தின் தன்நாட்டை இந்து அரசர்கள் ஆண்ட நாடுகளிலேயே தலைசிறந்த ஒன்றாகவும் மலேயாத் தீபகற்பத்தையும், கீழைக்கடற்கரைப் பகுதிகளையும் உள்ளிட்ட மிகப்பரந்த நாடாகவும் மாற்றி அமைத்தான்.

வரலாற்றின் மிகச்சிறந்த மன்னர்களில் ஒருவனான இராஜேந்திரனின் அரண்மனையும் தலைநகரமும் இன்றிருக்கும் நிலையை நினைத்து கண்ணீர்தான் வந்தது.

இது ஒரு பெரிய சுற்றுலாக் கதையென்பதால் இதனை இங்கேயே நிறுத்திக் கொள்கிறேன். பின்னர் நாங்கள், மீனாட்சி அம்மன்கோவில், பெரிய கோவில், சூரியனார்க் கோவில், பாரி ஆட்சி செய்த ஒரு மலைக்கோட்டையில் இருக்கும் ஒரு கோவில் (பெயர் மறந்துவிட்டது) என ஏறக்குறைய 20 கோவில்களுக்கு மேல் சென்றோம். முடிந்தால் என் பக்கத்தில் அதைப்பற்றி குறிப்புக்களை எழுத முனைகிறேன்.

--------------------------------

இது நான் தமிழோவியத்திற்காக எழுதிய ஒரு பதிவு.

பதின்மத்தில் நான் செய்த பயணம்

நன்றி தமிழோவியம். வாய்ஸ் பதிவு போட்டப்ப நினைவில் வந்தது, தேடிப் பார்த்தேன் என் பதிவில் என் கண்ணில் படாததால் மீண்டும் ஒருமுறை.